
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை இணையத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலானது கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.மேலும் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமை (இன்று) முதல் இணையத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதன்படி மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.மேலும் அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாத மாணவா்களும், தனித் தோ்வா்களும் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தோ்வெழுத அரசு அனுமதித்துள்ளது. மேலும் இவர்களுக்கான தேர்வு செப்டம்பா் அல்லது அக்டோபா் மாதத்தில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.