
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ.) நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளின் தரவுகளை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான அனைத்து தரவுகளையும் ஆய்வுசெய்து அதை தற்போது பட்டியலாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 15 லட்சம் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் 26 கோடியே 50 லட்சம் மாணவர்களும், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க 97 லட்சம் ஆசிரியர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் , அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், இதர பள்ளிகள் என மொத்தம் 58 ஆயிரத்து 897 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 45 லட்சத்து 93 ஆயிரத்து 422 அரசுப்பள்ளி மாணவர்கள் உள்பட ஒரு கோடியே 33 லட்சத்து 17 ஆயிரத்து 883 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இடைநிற்றல் விகிதம் :
தமிழகத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் இடைநிற்றல் விகிதத்தை பார்க்கும்போது, முதலாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் 1.1 சதவீதமும், 6 முதல் 8-ம் வகுப்புகளில் 0.4 சதவீதமும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 9.6 சதவீதமும் இருக்கிறது. இதன்மூலம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் தான் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
தக்கவைத்தல் விகிதம் :
தமிழகத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் தக்கவைத்தல் விகிதத்தை (ரெட்டன்சென் ரேசியோ) பார்க்கும்பொழுது, தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5- ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 94 பேர்தான் 5-ம் வகுப்பு வரை படித்து முடிக்கிறார்கள். நடுநிலை பள்ளிகளில் (1 முதல் 8-ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 86 பேர்தான் 8-ம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.
இதைப்போல், உயர்நிலைப்பள்ளிகளில் (1 முதல் 10-ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 82 பேர்தான் 10-ம் வகுப்பை முடிக்கிறார்கள். மேல்நிலைப்பள்ளிகளில் (1 முதல் 12-ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 பேரில் 68 பேர் மட்டும் தான் 12-ம் வகுப்பு வரை படித்து முடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.