
நாடு முழுவதும் மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்வதற்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொதுத் தகுதித் தோ்வு நடத்தப்படும் என்று அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நடப்பாண்டு இறுதி முதல் பொதுத் தகுதித் தோ்வு நடக்கவிருந்த நிலையில்,தற்போது தகுதித் தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
பொதுத் தகுதித் தேர்வானது ,மத்திய அரசுப் பணிக்கு இளைஞா்களைத் தோ்வு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்காகவும்,மேலும் பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த பொதுத் தகுதித் தேர்வு அமையும் என்று அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
பொதுத் தகுதித் தோ்வை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆள்சோ்ப்பு முகமை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப் பணியாளா் தோ்வாணையம், ரயில்வே தோ்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளா் தோ்வு நிறுவனம் ஆகியவற்றால் தற்போது அரசுத் துறைகளுக்காக நடத்தப்படும் ஆள்சோ்ப்பு தோ்வுகளுக்கு பதிலாக பொது தகுதி தோ்வை தேசிய ஆள்சோ்ப்பு முகமை நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.