
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் 3 வகையாக பிரிக்கப்பட்டு,பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இ பாஸ், இ பதிவு முறை ரத்து செய்யப்பட்டது.
- ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து வழிபாட்டுத் தளங்களும் முறையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
- துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
- மேலும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்களுக்கு அனுமதி இல்லை.
- மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல் , 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், மதுபார்கள், பொதுமக்கள் பங்கேற்கும் சமுதாய அரசியல் கூட்டங்கள், விளையாட்டு, பொழுது போக்கு, கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காக்கள் திறக்கவும் தடை நீடிக்கிறது.
- பள்ளி, கல்லூரிகள் செயல்பட தொடர்ந்து தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதிச்சடங்கில் 20 பேரும் பங்கேற்க அனுமதிக்கப்படும்.