
ஜூலை 9 ஆம் தேதி தபால் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு சென்னை தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் டி.வி.சுந்தரி விடுத்துள்ள செய்தியில், தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள், தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூலை 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
முகவர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் மத்திய,மாநில அரசுகள் நடத்திய பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேதியன்று விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை இல்லாத, சொந்த தொழில் செய்யும் படித்த இளைஞர்கள், காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் ஆயுள் காப்பீடு ஆலோசகர்கள், முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சங்க ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சுயஉதவிக் குழுவினர், கிராமத் தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.