
கொரோனா வைரஸானது உலகையே கடந்த ஓராண்டுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது.இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி மருந்துகளை தங்களது மக்களுக்கு செலுத்தும் பணியில் தீவிரமாக உள்ளன.
இந்த கொடிய கொரோனா வைரஸானது மனிதர்கள் மட்டுமின்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷியா உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.இந்த தடுப்பூசிக்கு கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷியா அதிகாரி வெளியிட்ட அறிக்கையில்,கார்னிவாக்-கோவ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு,நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.இந்த பரிசோதனையின் முடிவுகள் விலங்குகளுக்கு பாதிப்பில்லாதது எனவும்,மேலும் விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை அளிக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
பல நாடுகளும் கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.அமெரிக்கா, கனடா, போலாந்து, ஆஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் விலங்குகளுக்கான தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் கட்டி வருகிறது.